×

ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய அவலம் கழிவுநீர் குளமாக மாறிய மஞ்சள்நீர் துணை கால்வாய்

காஞ்சிபுரம், அக்.10: காஞ்சிபுரம் நகரில் நீர்நிலைகளின் உபரிநீர் வெளியேறும் கால்வாயாக இருந்த மஞ்சள்நீர் கால்வாயில், செடி கொடிகள் வளர்ந்து, கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. இதனை அதிகாரிகள் சீரமைக்காமல் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.காஞ்சிபுரத்தை அடுத்த சாலபோகம் பகுதியில் மஞ்சள்நீர் கால்வாய் தோன்றி காஞ்சிபுரத்தில் மையப்பகுதியின் வழியாக செல்கிறது. காஞ்சிபுரம் ஒக்கப்பிறந்தான் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர், வையாவூர் ஏரிக்கு கொண்டு சேர்க்க இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.இந்த கால்வாய் பிள்ளையார்பாளையம், ரெட்டிப்பேட்டை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரிவரை செல்கிறது. அதேபோல் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாய் பிரிந்து துணைக் கால்வாயாக நரசிங்கராயர் தெரு, மேட்டுத்தெரு, ரங்கசாமி குளம், யதோக்தகாரி குளம், திருக்காலிமேடு வழியாக சென்று மீண்டும் மஞ்சள்நீல் கால்வாயில் துணைக் கால்வாய் இணைகிறது.

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய மஞ்சள் நீர் துணைக் கால்வாயில் மழைநீர் செல்வதும் குறைந்து கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. தற்போது கால்வாய் பகுதியில் தண்ணீர் செல்லாதபடி செடி கொடிகள் வளர்ந்து அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதி கழிவுநீர் குளம்போல் மாறிவிட்டது.இந்த மஞ்சள்நீர் துணைக் கால்வாய் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களால் சுமார் 5 அடி வரை குறுகிவிட்டது. நகர பகுதியில் செல்லும் கால்வாயில் புல் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்தால் மட்டும், அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. சில இடங்களில் அதையும் முறையாக சரி செய்வதில்லை.இந்நிலையில், நகரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது. நகராட்சியின் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனமும், இந்தக் கால்வாயின் தடுப்பு சுவர்களை உடைத்து ஆங்காங்கே கழிவுநீரை வெளியேற்றி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய மஞ்சள் நீர் கால்வாய் மற்றும்  துணை கால்வாய் நிரந்தர கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது. அதிலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கழிவுநீர் முறையாக வெளியேறாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மஞ்சள்நீர் துணை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : canal ,sewage pond ,
× RELATED தேனியில் கால்வாய் சீரமைப்பு