×

கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் இருந்தும் தடுப்புகள் வைக்கும் போலீசார்

கூடுவாஞ்சேரி, அக். 10: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் மற்றும் பாதுகாப்பு போலீசார் இருந்தும் தடுப்புகள் வைத்து சாலைகள் மூடப்பட்டுள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அனைத்து தரப்பினரும் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை கடந்து சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் மற்றும் போலீசார் இருந்தும், தற்போது ஆயுதப்பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைத்து மூடியுள்ளனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்தில் சிக்கி அவதியடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் சிக்னலும், பாதுகாப்பு பணியில் போக்குவரத்து போலீசாரும் உள்ளனர். இதேபோல், மீன் மார்க்கெட் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் உள்ளனர். ஆனால், தற்போது ஆயூதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 பகுதியிலும் சாலைகளை கடக்கும் சென்டர் மீடியனின் குறுக்கே தடுப்புகளை வைத்து சாலைகளை மூடிவிட்டனர்.இதனால், ரயில் நிலையம், பஸ் நிலையம் செல்ல எளிதில் சாலையை கடக்க முடியாமல், சுமார் 2 கிமீ தூரமுள்ள சீனிவாசபுரம், மின்வாரிய அலுவலகம் சென்று சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், சர்வீஸ் சாலையில் எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசாரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.
மேற்கண்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக அகற்றிவிட்டு, சிக்னல் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது என்றனர்.

Tags : Guduvancheri GST road ,
× RELATED கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் கடும்...