பட்டா பெயர் மாற்றம் செய்ய ₹32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

மதுராந்தகம், அக். 10: மதுராந்தகம் அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு ₹32 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.மதுராந்தகம் அருகே ஒரத்தி அடுத்த விண்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர். செல்லப்பன் (45). இவர், பட்டா பெயர் மாற்றத்துக்காக ஒரத்தி சர்வேயர் ராஜகுருவை அணுகியுள்ளார். அப்போது, சர்வேயர் ராஜகுரு பட்டா மாற்றம் செய்ய ₹32 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த செல்லப்பனுக்கு, லஞ்சம் கொடுக்க மனமில்லை.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி, ₹32 ஆயிரத்தை, எடுத்து கொண்டு நேற்று மாலை ஒரத்தி சர்வேயரை சந்தித்தார். அந்த பணத்தை, தனது உதவியாளர் திருப்பதியிடம் கொடுக்கும்படி அவர் கூறினார். அதன்படி, உதவியாளரிடம் பணம் கொடுத்தார். அந்த நேரத்தில், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், திருப்பதி மற்றும் சர்வேயர் ராஜகுருவை கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags :
× RELATED பழநி ஜிஹெச்சில் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை