×

அனைவருக்கும் பாகுபாடின்றி இழப்பீடுதொகை வழங்ககோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இன்று விவசாயிகள் சங்கம் முற்றுகை

திருத்துறைப்பூண்டி, அக்.10: திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு கஜாபுயல் தாக்குதலால் 1 கோடிக்கு மேல் தென்னை மரங்கள் அடியோடு அழிந்தது. சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் 80 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்பட்டது. தென்னைக்கு மட்டும் நிவாரணம் வழங்கிய நிலையில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டிற்கான இழப்பீடு அனைவருக்கும் பெற்று தர தமிழக அரசு உத்திரவாதம் அளித்தது. தற்போது காப்பீட்டு நிறுவனம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு மறுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வலியுறுத்தி நாளை (இன்று) 10ம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் சுமார் 400 வருவாய் கிராமங்களுக்கு வரப் பெற்றுள்ள இழப்பீடு தொகையை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் ஒப்புதலின்றி பழைய கடனில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கதக்கது.

நிபந்தனையின்றி அனைவருக்கும் உடன் வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படாமல் காலம் கடத்தி வருவதால் சாகுபடி பணிகள் முடங்கி உள்ளது. தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் குழந்தைகள் மருத்துவமனையில் 2018-19ம் ஆண்டில் மட்டும் 995 குழந்தைகள் இறந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றார். திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், கவுரவ தலைவர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சிவமுத்துராமன், ஒன்றிய செயலாளர், பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Farmers' Association ,Thiruvarur Collector ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு