புதுவையில் முக்கிய வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசப்பட்டன

புதுச்சேரி,  அக். 10:   புதுவையில் விபத்துகளை தடுக்கும் வகையில் முக்கிய வேகத்தடைகளில்  டிராபிக் போலீசாரின் நடவடிக்கையின் பேரில் வெள்ளைநிற வர்ணம் பூசப்பட்டன.
புதுவையில்  ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ரப்பர் வேகத் தடையால் இரவு நேரங்களில்  விபத்துகள் நடந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் பாதிக்கப்பட்ட  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பேரில்  முக்கிய சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைநிற வர்ணம் பூசும் பணிகள்  முடுக்கி விடப்பட்டன. மேலும் குண்டும், குழியுமான சாலைகளும்  சீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே சந்திப்புகளில் இடம்பெற்றுள்ள ரப்பர்  வேகத்தடைகளை அடையாளம் காணும் வகையிலும் வர்ணம் பூசப்பட வேண்டுமென அரசுக்கு  வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 இந்த நிலையில் புதுச்சேரி  கிழக்கு மற்றும் வடக்கு டிராபிக் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில்  வேகத்தடைகள் முன்பு வெள்ளைநிற வர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில்  நடைபெற்றன. கிழக்கு காவல் சரகத்தில் ஆம்பூர் சாலை- எஸ்வி படேல் சாலை  சந்திப்பு, செஞ்சி சாலை- சோனாம்பாளையம் சந்திப்பு, மிஷன்வீதி, சுப்பையா  சாலை, பிரான்சுவா மார்ட்டின், லபோர்தனே வீதி, புஸ்சி வீதி, ஈஸ்வரன் கோயில்  வீதி, அண்ணா சாலை சந்திப்பு, 45 அடி ரோடு, பாரதி வீதி, சின்னமணிக் கூண்டு  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டு,  வேகத்தடை குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டன. இதேபோல் வடக்கு  காவல் சரகத்தில் ஏர்போர்ட் சாலை, ஜீவா காலனி சந்திப்பு, நீதிபதிகள்  குடியிருப்பு பகுதி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, கல்லூரி சாலை, காமராஜர்  சாலை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள 13 வேகத்தடை முன்பு டிராபிக்  இன்ஜினீயரிங் செல் பிரிவு உதவியுடன் வெள்ளை நிற வர்ணம் பூசப்பட்டன.  இதன்மூலம் வேகத்தடைகள் இருப்பதை முன்கூட்டியே வாகன ஓட்டிகள் கண்டறிந்து  பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டிராபிக் போலீசார்  தெரிவித்தனர்.

Tags :
× RELATED 40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை