விவசாயி மர்ம சாவு

திருவெண்ணெய்நல்லூர், அக். 10:  திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச்சேர்ந்த பெரியசாமி மகன் நாராயணன் (40) விவசாயி. இவரது பைக்கில் பெட்ரோல் இல்லாததால் அதே ஊரைச்சேர்ந்த குப்பன் மகன் முருகன் என்பவரிடம் பைக்கை கடனாக வாங்கிகொண்டு நேற்றுமுன்தினம் மாலை மணக்குப்பம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு நாராயணன் சென்றுள்ளார்.அங்கு பெட்ரோல் வாங்கி விட்டு பைக்கில் புறப்பட்டவர் பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் மணக்குப்பம்-ஒட்டனந்தல் செல்லும் மண்பாதையில் நாராயணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு கிடந்த நாராயணன் உடலைக்கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாராயணனின் மனைவி வள்ளி திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரில் தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? விஷபூச்சிகள் கடித்து இறந்து விட்டாரா, இதுதவிர வேறு ஏதும் காரணமா என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாராயணன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: