×

க.தொழூரில் குடிநீர் தட்டுப்பாடு

விருத்தாசலம், அக். 10: கருவேப்பிலங்குறிச்சி அருகே க.தொழூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதால் மறியலில் ஈடுபட மக்கள் முடிவு செய்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.தொழூர் ஊராட்சியில் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்  உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர்  தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள்  பழுதடைந்ததால் அவைகளை மாற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகம் கடந்த  சில மாதத்திற்கு முன்பு ஈடுபட்டது. அப்போது புதிய குழாய்களை பொருத்தாமல்  பழைய குழாய்களையே மீண்டும் பொருத்தியதால் பொதுமக்கள் அப்பணியை தடுத்து  நிறுத்தி புதிய குழாய் அமைக்க கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக அப்பணி நடைபெறாமல் பாதியிலேயே நின்றது. ஆனால் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித  நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் பொதுமக்களுக்கு  குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீருக்காக அருகில்  உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று  குடிநீர் எடுத்து வருகின்றனர். மேலும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை  விரைந்து முடித்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சி  நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்  இந்த பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தெருக்களில் உள்ளதால், வாகனங்கள்  செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் இடையூறாக இருந்து  வருகிறது. மேலும் அடிக்கடி பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்பட்டு  வருகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஓரிரு நாட்களில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி