×

திலேப்பியா மீன்களை வளர்த்து விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தல்

கடலூர், அக். 10: கடலூர் மீன்வளத்துறை அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பண்ணை குட்டைகளில் மீன்வளர்க்கும் விவசாயிகள் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை தேர்வு செய்து தங்களது பண்ணை குட்டைகளில் வளர்த்தால், மற்ற மீன்களை வளர்ப்பதை விட இதில் அதிக லாபம் பெறலாம்.மற்ற மீன் இனங்களைக் காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிக எண்ணிக்கையில் இருப்பு செய்து வளர்க்கலாம். இவ்வகை மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மற்ற மீன்களை காட்டிலும் பண்ணை குட்டைகளில் இம்மீன்கள் மிக வேகமாக வளரக்கூடியதும், மேலும் நுகர்வோர்கள் அதிகம் விரும்புவதும் என இவ்வகை மீன் சிறப்புத்தன்மை பெற்றுள்ளது. நீரின் அமில காரத்தன்மை ஏற்றத் தாழ்வுகளையும், அதிகளவில் எதிர் கொண்டு வேகமாக வளரக்கூடியது.

எனவே, விவசாயிகள் தங்களது பண்ணை குட்டைகளில் மரபணு மேம்படுத்தப்பட்ட  திலேப்பியா மீன்களை (கிப்ட்  திலேப்பியா மீன் குஞ்சுகள்) தேர்வு செய்து வளர்த்து, அதிக அளவில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் இன குஞ்சுகள் (கிப்ட் திலேப்பியா) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை அருகில் அமைந்துள்ள அரசு மீன்பண்ணையில் வருடம் முழுவதும் விற்பனைக்கு தயாராக உள்ளது. அவற்றை விவசாயிகள் வாங்கி வளர்த்து பயன்பெறலாம்.மேலும், இவ்வகை இன மீன்கள் வளர்க்கும் விவசாயிகள் தங்களது மீன் பண்ணையை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து எக்காரணம் கொண்டும் இம்மீன்கள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் பரவா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மீன் பண்ணையை சுற்றி சரியான முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து, கடலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்பண்ணையை பதிவு செய்து அதன் பின்னரே தங்களது பண்ணைகளில் கிப்ட்  திலேப்பியா மீன்களை வளர்க்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்தான விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,  மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி வாயிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயனடையுமாறு மீன்வளர்க்கும் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்