×

நவம்பர் 1 முதல் 7ம் தேதி வரை நடக்கிறது 2ம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு: போலீஸ் அதிகாரிகள் தகவல்

வேலூர், அக்.9: 2ம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நவம்பர் 1ம் தேதி தொடங்கி 7ம் வரை நடைபெறும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, தீயணைப்புத்துறை ஆகிய பிரிவுகளில் 2ம் நிலை காவலர்களுக்கான 8,888 காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். இதில் 46 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதேபோல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் 32,749 பேர் தேர்வு எழுதினர். வேலூர் மாவட்டத்தில் 23,585 பேர் எழுதிய தேர்வில் 3,688 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9,164 பேர் எழுதிய தேர்வில் 1,334 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2 மாவட்டங்களிலும் மொத்தம் 5,022 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்காக உடற்தகுதி, ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தேர்வுகள் குறித்து தேதிகள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 2ம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 16 மாவட்டங்களிலுள்ள ஆயுதப்படை மைதானங்களை தயாராக வைத்திருக்க அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 22 பேர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார...