ரயிலில் தவறவிட்ட 5 பவுன் நகையை பெண்ணிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்

கோவில்பட்டி, அக். 9: தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகள் சுமதி (30). கேரள மாநிலத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் மாற்றுத்திறளாளியான தனது கணவரை பார்க்க மகளுடன் சென்றார். பின்னர் மகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் ஏறினார். நெல்லை ரயில் நிலையம் வந்ததும், ரயிலில் இருந்து சுமதி மகளுடன் இறங்கினார். ரயில் திருச்சி நோக்கி புறப்பட்ட நிலையில், சுமதி தான் கொண்டு பைகளில், நகைகள் வைத்திருந்த பையை காணாது அதிர்ச்சியடைந்தார். அதில் செயின், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. இதையடுத்து நெல்லை ரயில் நிலைய போலீசாரிடம் சுமதி புகார் தெரிவித்தார். அப்போது திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கோவில்பட்டி அருகே வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.

உடனடியாக வாஞ்சி மணியாச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமதி பயணம் செய்த பெட்டியில் ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு நகைப்பை இருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட ரயில்வே போலீசார், அந்த பையை தூத்துக்குடி ரயில் நிலைய ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்ட சுமதியிடம் ரயில்வே போலீஸ் ஏட்டு செந்தூர்பாண்டி, நகைப்பையை ஒப்படைத்தார். அதனைப் பெற்று கொண்ட சுமதி, ரயில்வே போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

Related Stories: