விஜயதசமியை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் வித்யாரம்பம்

தூத்துக்குடி, அக். 9: தூத்துக்குடியில் விஜயதசமியை முன்னிட்டு சிவன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகள் நடந்தன. ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியில் துவக்கமாக கருதப்படும் வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் இந்த தினத்தில், குழந்தைகளுக்கு முதல் கல்வி கற்றுக் கொடுப்பது வழக்கம். இதனை முன்னிட்டு தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் உள்ள சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தட்டில் பரப்பி வைக்கப்பட்ட அரிசியில் கடவுள் வழிபாடு எழுத்து, தமிழ் எழுத்துகள் உள்ளிட்டவை குழந்தையின் கையை பிடித்து எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் செல்வம் பட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதேபோல் தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்த கேந்திராவின் யோகா பயிற்சியாளர் பாகவததாஸ் தலைமையில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Related Stories: