குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காற்றில் பறந்த காவல்துறை உத்தரவு

உடன்குடி, அக். 9: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் காவல்துறை உத்தரவை மீறி அதிக அதிர்வு ஏற்படுத்தும் இசை வாத்தியம் முழங்க  இரும்பிலான பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பிரசித்திப் பெற்ற தசரா திருவிழா, கடந்த  29ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. திருவிழா நாட்களில் கோயில் வளாக பகுதியில் பக்தர்களின் நலன்  கருதியும், முதியவர்களின் நிலை அறிந்தும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்த கூடிய  தாரை, தப்பட்டை, செண்டை மேளம் உள்ளிட்ட இசைவாத்தியங்களை இசைக்க கூடாது. தசரா வேடமணியும் பக்தர்கள் இரும்பிலான ஈட்டி, சூலாயுதம், கத்தி,  வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. மேலும் சாதி கொடிகள் ஏந்தி  வரவும் தடை விதித்து தசரா குழு ஆலோசனை கூட்டத்தில் போலீசார் உத்தரவிட்டனர். தொடர்ந்து தசரா  திருவிழாவின் 1ம் திருநாள் முதலே போலீசார் கோயிலின் முகப்பு பகுதியிலேயே அதிக அதிர்வு இசைகளை உண்டாக்கிய  இசைவாத்தியங்கள், இரும்பிலான பொருட்கள் கொண்டு வந்த பக்தர்கள்  குழுவினரிடம் போலீசார் தடை உத்தரவு குறித்து விளக்கினர்.

இதையடுத்து பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் அதனை கொண்டு வரவில்லை. இந்நிலையில் 7ம் நாள் விழாவின்போது நள்ளிரவில் வந்த தசரா  குழுவினர் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி தள்ளு முள்ளுவில்  ஈடுபட்டனர். பின்னர் கோயில் முன்மகா மண்டபம் வரை இசை வாத்தியங்கள், இரும்பிலான ஈட்டி,  வாளுடன் சென்றனர். இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உயரதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.இதனிடையே நேற்றும் கோயில் வளாக பகுதியில் அதிக அதிர்வு எழுப்பும் இசைவாத்தியங்கள் முழங்க இரும்பினால் ஆன பொருட்களுடன் வந்தனர். இதையடுத்து மாலையில் போலீசார் குவிக்கப்பட்டு 6 மணி முதல் கோயில் வளாகத்தில் அதிர்வுதரும் இசை முழங்க தடைவிதித்தனர். மேலும் இரும்பிலான பொருட்கள் கொண்டு வரவும் அனுமதிக்கவில்லை.

இலவச கழிவறையில் ரூ.10 அடாவடி வசூல்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி இன்று அதிகாலையில் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.பக்தர்களின் வசதிக்காக சில பகுதிகளில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பக்தர்கள் கூடும் அளவிற்கு அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமிய இடத்தில் தற்காலிகமாக 80 கழிவறைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.இலவச கழிவறை பகுதியில் ஒரு கும்பல் அமர்ந்திருந்து பக்தர்களிடம் ரூ.10 வழங்க வேண்டும் என கட்டாய வசூலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்களிடம் கோயில் நிர்வாகத்தினர் இலவசமாக அமைத்துள்ளனர், ஆனால் நீங்கள் ஏன் கட்டாய வசூல் செய்கிறீர்கள் என பக்தர்கள் கேட்டபோது அதனை சுத்தம் செய்ய பணம் வேண்டாமா? என அடாவடியான பதிலை கூறினர்.இந்த அடாவடி வசூல் காரணமாக சிறுவர், சிறுமியர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தினர். இதனால் கடற்கரை பகுதி சுகாதாரக் கேடு நிறைந்து, துர்நாற்றம் வீசியது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தினரும் வரும் காலங்களிலாவது இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: