×

சுவாமிதோப்பில் சாமி தரிசனம் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் அய்யா வழி பாலபிரஜாபதியுடன் சந்திப்பு

நெல்லை, அக். 9: நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சுவாமிதோப்பு அய்யா வழி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அய்யா வழி பாலபிரஜாபதியை சந்தித்து ஆதரவு கேட்டதோடு, பிரசாரத்திற்கும் அழைப்பு விடுத்தார்.
நாங்குநேரி சட்டசபைக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் அய்யா வழி மக்களிடையே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஏற்கனவே ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் சுவாமி தோப்பு அய்யா வழி அன்புவனத்திற்கு சென்றார். அங்கு முறைப்படி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அய்யா வழி பாலபிரஜாபதியை சந்தித்து  ரூபி மனோகரன் ஆதரவு கேட்டார். தொகுதியில் பிரசாரத்திற்கும் அவரை அழைத்தார். அன்பு வனத்தில் உள்ள நிர்வாகிகளையும் சந்தித்து அவர் பேசினார். பின்னர் ரூபி மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வழிக்கும் எனக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. அய்யா வைகுண்டரின் கொள்கைகளை நான் எப்போதுமே மதித்து நடப்பவன். அவரது கருத்துக்கள் எளிமையானவை. அதேபோல் அய்யா வழி பக்தர்களும் எளிமையையும், நேர்மையையும் கடைப்பிடிக்கின்றனர்.

இன்று நான் சுவாமிதோப்பில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பாலபிரஜாபதி அடிகளாரிடம் ஆசி பெற்றேன். அவர் எனக்கு ஆதரவு தருவதாக கூறியதோடு, பிரசாரத்திற்கும் 3 நாட்கள் வருவதாக தெரிவித்தார். நாங்குநேரி தொகுதியில் அய்யா வழி மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்படும். நாங்குநேரி தொகுதியை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வதே எனது லட்சியம். வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். நாங்குநேரி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் முக்கியம். நான் கட்டுமான தொழிலில் இருப்பதால், பல்வேறு முதலீடுகளை இங்கு கொண்டு வருவேன். இத்தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிறிய, சிறிய தொழிற்சாலைகளை கொண்டு வருவேன். தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் இவ்வாறு அவர் தெரிவித்தார். சுவாமிதோப்பு அன்புவனம் அய்யா வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறுகையில், ‘‘சுவாமிதோப்புக்கு வந்து அய்யாவை வணங்கியவர்கள் யாரையும் அவர் கைவிட்டதில்லை. முன்னாள் பிரதமர் சந்திரசேகர் முதல் பலரும் இங்கு வந்து அய்யாவை வணங்கி வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அய்யா வழிபாடு நடத்தி சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Tags : Sami darshan ,candidate ,Swamithope ,Nanguneri ,congress ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய...