கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாற்றில் மணல் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தஞ்சை, அக். 9: தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாற்றில் மணல் கொள்ளையடித்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. வீடு கட்டுவதற்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் அரசு மணல் குவாரி வைத்து அதற்குரிய தொகையை பெற்று கொண்டு மணலை எடுத்து வந்தனர். இதனால் மணல் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் குவாரி இல்லாததால் வீடு கட்டுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆறுகளில் திருட்டுத்தனமாக லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் சிலர் மணலை கடத்தி வந்து வீடு கட்டுபவர்களுக்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்றனர். வீடு கட்டுபவர்களும் வேறு வழியின்றி அதிக விலைக்கு மணலை வாங்கி பயன்படுத்துகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு லோடு ஆட்டோ மணல் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லோடு ஆட்டோ மணல் ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், மணலின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், திருட்டு மணல் எடுப்பதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென வீடு கட்டுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஒப்பந்தக்காரர் மதி கூறுகையில், ஆறுகளில் மணல் எடுக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணலை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். தற்போது ஆறுகளில் தண்ணீர் வருவதால் கரையோரங்களில் உள்ள வீடுகளில் கூலி ஆட்களை வைத்து தண்ணீரில் மூழ்கி மணலை எடுத்து வந்து சேமித்து வைத்து கொள்கிறார்கள். பின்னர் மணல் தேவைப்படுபவர்கள், பணத்தை கொடுத்து லோடு ஆட்டோ அல்லது மாட்டு வண்டிகளில் எடுத்து சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

கூடுதல் விலை விற்பனை செய்வது குறித்து மணல் சேமித்துள்ளவரிடம் கேட்டபோது ஆறுகளில் தண்ணீர் வந்ததால் சம்பளத்துக்கு ஆட்களை வைத்து மணலை எடுக்கிறோம். பின்னர் அரசு அதிகாரிகள் வந்தால் எங்களையும், மணல் எடுத்து செல்லும் லோடு ஆட்டோ மற்றும் மாட்டு வண்டிகளில் செல்லும் மணல்களை பிடிக்க கூடாது என்பதற்காக மாதம்தோறும் அல்லது வாரம்தோறும் மாமூல் கொடுக்க வேண்டியுள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள். ஆறுகளில் மணல் கடத்துபவர்களுக்கு உடந்தையாக இருந்தாலோ அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு மணல் கடத்தலுக்கு உடந்தையாக அதிகாரிகள் உள்ளனர். எனவே மணலுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், உடனடியாக திருட்டு மணல் எடுப்பதை தடுக்க வேண்டும், திருட்டு மணலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: