திருமானூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்புபொதுமக்கள் அவதி

தஞ்சை, அக். 9: திருமானூரில் இருந்து தஞ்சை நகர பகுதிக்கு செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் அசுத்த நீர் கலப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 51 வார்டு மக்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத குழாய் போடப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு பம்பிங் ஸ்டேஷன் பகுதிக்கு வந்து, பின்னர் வெண்ணாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு மாநகர பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அரசூர் கிராமத்தில் கோரையாறு வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீர் குழாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன் உடைந்தது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது கொள்ளிடம் குழாய் உடைந்துள்ளதால் அதிலிருந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது. குழாயில் தண்ணீர் நிற்கும்போது வாய்க்காலில் உள்ள தண்ணீர் குழாயுக்குள் செல்லும் அபாய நிலை உள்ளது.

வாய்க்கால் தண்ணீர் கொள்ளிடம் குடிநீரில் கலப்பதால் அதை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் அரசூர் கிராமம் முழுவதும் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில் சீதோஷ்ண மாற்றத்தால் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள், நெற்பயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வயலுக்கு ரசாயன உரங்கள் மற்றும் களைக்கொல்லி போன்ற விஷ தன்மையுடைய மருந்துகளை தெளிக்கும்போது விஷம் கலந்த தண்ணீர் கோரையாறு வாய்க்காலில் கலந்து வந்து அந்த தண்ணீர் கொள்ளிடம் குடிநீர் குழாயுக்குள் வந்தால் அதை பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீரக கோளாறு, கேன்சர், கல்லீரல் வீக்கம் போன்ற நோய்கள் வரும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசூர் கோரையாறு வாய்க்கால் வழியாக செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்துள்ள பகுதியை சீர் செய்து தஞ்சை மாநகராட்சி மக்களை காப்பாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் முருகானந்தம் கூறுகையில், அரசூர் கோரையாறு வாய்க்கால் வெட்டாற்றில் இருந்து பிரிந்து 10 கிராமங்கள் வழியாக குடிநீருக்காகவும், சாகுபடிக்காகவும் மற்றும் பயன்பாட்டுக்கும் சென்று வெட்டாற்றில் கலக்கிறது. இந்த வாய்க்கால் வழியாக செல்லும் கொள்ளிடம் குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களான நிலையில் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். பலமுறை கலெக்டருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் குறுந்தகவல் அனுப்பியும் அலட்சியப்படுத்தி வருகின்றனர். அப்பகுதி விவசாயிகள், பயிர்களை காப்பாற்ற வேண்டி, ரசாயன உரங்களை தெளிக்கும்போது அந்த தண்ணீர் வாய்க்காலில் கலந்து உடைந்துள்ள கொள்ளிடம் குடிநீர் குழாயில் சென்றால் அதை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அரசூர் சாலையில் தினம்தோறும் அமைச்சர், கலெக்டர் முதல் அனைத்துத்துறை அதிகாரிகளும் சென்று வரும் நிலையில் அதை பார்த்தும் நடவடிக்கை எடுக்காமல் சென்று வருவது வேதனையான விஷயமாகும். எனவே தஞ்சை மாநகராட்சி மக்களை காப்பாற்ற உடனடியாக அரசூர் கோரையாறு வாய்க்காலில் உடைந்துள்ள கொள்ளிடம் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: