குரும்பபாளையத்தில் 3 ஆண்டாக சேதமடைந்து காணப்படும் தடுப்பணை

கோவை, அக். 9:கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையால் சேதமடைந்த தடுப்பணை தற்போது வரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், தண்ணீர் கேரளாவிற்கு வீணாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் மஞ்சிப்பள்ளம் ஆறு உள்ளது. இதற்கு, மாச்சம்பாளையம், சுந்தராபுரம், குறிச்சி, கோவைப்புதூர், பிள்ளையார்புரம் பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது அதிகளவில் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த தண்ணீர் தமிழக, கேரளா எல்லையில் உள்ள வாளையார் அணைக்கு சென்றடைகிறது. இந்த ஆற்றில் வரும் தண்ணீரை  விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால், மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் மஞ்சிப்பள்ளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மூன்று தடுப்பணைகள் உடைந்தது. இதில், இரண்டு தடுப்பணைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த தடுப்பணைகள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளது.

Advertising
Advertising

இதன் காரணமாக தண்ணீர் சேமிக்க முடியாமல், தண்ணீர் முழுவதும் கேரளாவிற்கு சென்று வீணாக சென்றுகொண்டு இருக்கிறது. இதனை சீரமைக்க அரசியல் கட்சியினர், அந்த பகுதியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைநீரை சேகரிக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தும் அரசு, முதலில் தடுப்பணைகளை சீரமைத்து கிடைக்கும் மழைநீரை சேமிக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவிற்கு வீணாக தண்ணீர் செல்வதை தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி, தடுப்பணையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: