திருட்டு சம்பவத்தில் மதிப்பை குறைத்து வழக்குப்பதிவு

கோபி: கோபி உள்ள அரசூர் மாக்கினாங்கோம்பையை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது தந்தை கருப்புசாமி மற்றும் தாயார் தங்கமணி ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடுமலையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் முன்பக்கம் இருந்த இரண்டு கதவுகளும் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டிற்குள் இருந்த 4 பீரோவை உடைத்து, 30 பவுன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Advertising
Advertising

இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கருப்புசாமியிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதில் 30 பவுன் மற்றும் ரூ.2.50 லட்சம் கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்யாமல், வெறும் 18 பவுன் நகை மட்டுமே கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கருப்புசாமி, கடத்தூர் போலீசார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். கோபி பகுதியில் கொள்ளைச்சம்பவம், வழிப்பறி சம்பவங்களில், களவு போன பொருட்களின் மதிப்பை குறைத்து வழக்குப்பதிவு செய்து வருவதாக காவல்துறை மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Stories: