டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணியில் 2500 ஊழியர்கள் தீவிரம்

சேலம், அக். 4: சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 2500 ஊழியர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என சுகாதார துணை இயக்குனர் நிர்மல்சன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தலைமை அரசு மருத்துவமனையில் பிரத்யேக காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு பரவாமல் தடுக்க, சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து சுகாதா பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:

Advertising
Advertising

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், 40 ஊழியர்கள் வீதம் 800 பேரும், 30 பேரூராட்சிகளில் 30 ஊழியர்கள் வீதம் 1200 பேரும், 4 நகராட்சிகளில் 200 பேரும், மாநகராட்சிகளில் 300 பேரும் என மொத்தம் 2500 பேர் கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொசுவை ஒழிக்க 50 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் சுண்ணாம்பு அடித்து பயன்படுத்த வேண்டும். பயன்பாடின்றி காணப்படும் பொருட்களை அகற்ற வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால்,  உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும். போலி மருத்துவர்களை அணுகி மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் திரவ உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: