×

கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போளூர், அக்.4: கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி போளூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போளூர் பஸ் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் கே.பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சி.பெருமாள், மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.அப்போது, போளூர் தரணி சர்க்கரை ஆலை 2018-2019ம் ஆண்டு அரவை செய்த கரும்புக்கு நிலுவை பாக்கி ₹55 கோடியை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 2013-2017 ஆகிய 4 ஆண்டுகளில் தரணி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு அரசு அறிவித்த எஸ்.ஏ.பி ₹65 கோடியை பெற்று தரவேண்டும். வறட்சியால் தண்ணீரின்றி காய்ந்த கரும்புக்கு பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, விவசாயிகள் அரை நிர்வாணத்தில் தமுக்கடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீசார், வருவாய் ஆய்வாளர் பிரேம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஆலை நிர்வாகத்துடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆரணி ஆர்டிஓ மைதிலி தலைமையில் போளூர் தாலுகா அலுவலகத்தில் நாளை(இன்று) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.இதையடுத்து அரை நிர்வாண போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.

Tags : Farmers' Union ,
× RELATED கொள்முதல் செய்யாமல் வீணான நெல்,...