டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் நகல்கள் வழங்க வேண்டும் தேர்வர்கள் வலியுறுத்தல்

பழநி, செப்.20:  டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு விடைத்தாள் நகல்கள் வழங்க வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, 2, 4, 7, 8 மற்றும் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவராக நடராஜன் இருந்த காலகட்டத்தில் பல புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்விற்கான ஆண்டு அட்டவணை, நேர்முகத் தேர்வு வீடியோ பதிவு, ஆன்லைன் தேர்வுமுறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங் முறை, மதிப்பெண் வெளியிடும்முறை, மொத்த தகுதி மற்றும் இனவாரியான தகுதிநிலைகள் உள்ளிட்ட மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி தற்போதும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  ஆனால், ஏற்கனவே கொள்கை ரீதியாக அறிவிக்கப்பட்டிருந்தபடி போட்டித்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களின் நகல்கள் வழங்கும் முறை இதுவரை பின்பற்றப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் விடைத்தாள் நகல்கள் வழங்கும் முறையினை பின்பற்றுகிறது. இம்முறையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் பின்பற்ற வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி கூறுகையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பல மாணவர்கள் தங்களது மதிப்பெண் குறைவாக உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இதுபோன்ற புகார்களை தவிர்க்க டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத்தன்மையாக செயல்படுவதால் மாணவர்களின் விடைத்தாள் நகல்களை வழங்க முன்வர வேண்டும். இதனை தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

Related Stories: