×

அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குவிகிறது பழநியில் வேகமாக பரவுது மர்மக்காய்ச்சல் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை எடுக்குமா?

பழநி, செப்.20:  பழநி பகுதியில் அதிகரிக்கும் காய்ச்சலின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.     பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருதாக தெரிகிறது. பழநி நகரின் 18வது வார்டில் உள்ள சிறுமிக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏராளமானோருக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.    இதன்காரணமாக பழநி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், பழநி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை வசதிகள் இல்லை. பரிசோதனை வசதியும் இல்லை. திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் இதற்கான வசதிகள் இல்லையென கூறப்படுகிறது.

 இதனால் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்கள் மதுரைக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
    ஆனால், பழநி அரசு மருத்துவமனையின் ரத்த பரிசோதனை மையத்தில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் ரத்த பரிசோதனை செய்ய பலமணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உண்டாகி உள்ளது. இதுபோல் மருந்தகத்திலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 2 வருடங்களில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு பழநி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பலியாயினர். எனவே, பழநி அரசு மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்தி அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதியை உண்டாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஆய்வகம் மற்றும் மருந்தகம் அமைக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழநி அரசு மருத்துவமனையில் வைரலாஜி ஆய்வக வசதி  இல்லை. இதனால் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளானவர்கள் கண்டறியப்பட்டால் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

Tags : government hospitals ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில்...