×

உசிலம்பட்டி அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேக்கம்

உசிலம்பட்டி, செப். 20: உசிலம்பட்டி அருகே, ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியிருக்கும் மழைநீரால், போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகளும், 20 கிராம மக்களும் அவதிப்படுகின்றனர்.உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி அருகே காந்திநகரில் ரயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். விவசாயிகள் விளைவிக்கும் பூ, தக்காளி, கத்தரிக்காய், வெண்டக்காய் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இந்த வழியாக கொண்டு செல்கின்றனர். பாலத்தில் கடந்த 10 தினங்களாக மழைநீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மதுரை-போடி அகல ரயில் பாதை பணி நடக்கும் இந்த சமயத்தில் மழைநீர் பெருகியிருப்பது பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காந்திநகர் சந்திரசேகர் கூறுகையில், ‘இந்த பாலத்தை கட்டும்போது மழைநீர் பெருகினால், மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றுவோம் என ரயில்வே அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தெரிவித்தனர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் பெருகியுள்ளது. இதனால், பள்ளி மாணவ,

மாணவியர் வயல்வெளிகளில் நடந்து செல்கின்றனர். டூவீலர்கள், ஆட்டோக்கள் சங்கம்பட்டி கிராமத்தை சுற்றி வருகின்றன. காலவிரயம் ஏற்படுகிறது. இரவில் குழந்தைகள், பெண்கள் காட்டுப்பகுதியில் நடந்து செல்கின்றனர். மழைநீர் தேங்கிக் கிடப்பதால், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து செல்லம்பட்டி ஊராட்சி மற்றும் யூனியன் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக எந்தப் பணியும் ஒப்படைக்கப்படவில்லை. ரயில்வேதுறை அதிகாரிகளிடம்தான் தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Rainwater harvesting ,railway ground ,Usilampatti ,
× RELATED உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டியில்...