7 ஆண்டாக இழுத்தடிக்கப்படும் கோரிப்பாளையம் மேம்பால திட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது எப்போது?

மதுரை, செப். 20: மதுரையில் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் திட்டம் 7 ஆண்டாக இழுத்தடிக்கப்படும் நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.   மதுரை மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், மாதந்தோறும் 7,500 டூவீலர்கள் உள்பட 10 ஆயிரம் புது வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக 11 சாலைகள் சந்திக்கும் கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் உள்ளது. தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கின்றனர். அழகர்கோவில் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ‘பீக் அவர்சில்’ மூன்று முறை சிக்னல் மாறிய பிறகே கடக்க முடிகிறது. இந்த நெரிசலுக்கு தீர்வு காண 2012ல் பறக்கும் பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான மாதிரி தோற்றத்தை வெளியிட்டு, பாலத்திற்கு தூண்கள் அமைக்க மண் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், கூடுதல் நில ஆர்ஜிதம், கட்டிடம் இடிப்பு உள்ளிட்ட சில பிரச்னைகளால் பறக்கும் பாலம் திட்டத்திற்கு சிக்கல் உருவானது. சிக்கலை தீர்க்க நில ஆர்ஜித அளவை குறைக்க 2017ல் அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில், நெடுஞ்சாலை துறையினர் மறு ஆய்வு நடத்தி, வட்ட வடிவ பறக்கும் பாலத்தை கைவிட்டு, உயர்மட்ட பாலமாக கட்ட வடிமைப்பை மாற்றினர்.  

இந்த பாலம் அழகர்கோவில் சாலையில், தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகில் இருந்து ஆரம்பித்து  கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்று பாலத்திற்கும், செல்லூரை நோக்கியும் இரு பிரிவாக பிரிகின்றன. அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலை நோக்கி பாலம் அமைக்காமல் தற்போதுள்ள சாலை மட்டும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாலம் சுமார் ஒன்றரை கி.மீ. நீளத்தில் அமையும் இந்த உயர்மட்ட பாலத்தின் இடையில் தமுக்கும் சந்திப்பில், காந்தி மியூசியம் நோக்கியும், நேரு சிலை நோக்கியும் பிரிவு பாதைகள் அமைக்கப்படும். இந்த பாலத்தின் மதிப்பீடு ரூ.131 கோடி என திட்ட அறிக்கை தயாரானது. இதன் பிறகும் அதன் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. மக்கள் மத்தியில் கோரிப்பாளையம் மேம்பாலம் என்னாச்சு? என்பதே கேள்வியாக உள்ளது. இதோ வருகிறது... அதோ வருகிறது... என 7 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.ஆனால் வைகை ஆற்றின் குறுக்கே, மதுரை பெத்தானியபுரம் முதல் விரகனூர் வரை 10 உயர்மட்ட பாலங்கள் உள்ளன.  புதிதாக குருவிகாரன்சாலையில் பறக்கும் பாலம் ரூ. 23 கோடியில் கட்டுவதற்கு மதுரை மாநகராட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘கோரிப்பாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டு வதற்கு நீடித்து வந்த சிக்கல் நீங்கி விட்டது. புதிய திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Related Stories: