×

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக குடிமராமத்து செய்யும் ஆயக்கட்டுக்காரர் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு கலெக்டர் அறிவிப்பு

சாயல்குடி, செப். 20: மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கண்மாய், கால்வாய்களை சீரமைக்கும் குடிமராமத்து பணியை சிறப்பாக செய்யும் ஆயக்கட்டுக்காரர் நலச் சங்கத்தை ஊக்குவிக்க தேர்வாகும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் வீரராகராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் நீர்வள ஆதாரங்களை பேணி காக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும், மழைநீரை வீணடிக்காமல் சேமிக்கவும், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யும் பணி, ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் மற்றும் சம்பை கிராமங்களில் நடந்தது.

வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பில், சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டிலும் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் வீரராகராவ் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, ’குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் கண்மாய்கள் புனரமைப்பு மற்றும் மதகுகள் புதுப்பித்தல், தேவையான இடங்களில் புதியதாக மதகு அமைத்தல் பணிகள் நடந்து வருகிறது.
கீழ் வைகை பரமக்குடி வடிநில கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடனை, பரமக்குடி, முதுகுளத்தூர் வட்டங்களில் 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், மதுரை குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டங்களில் 28 கண்மாய்களை சீரமைக்க ரூ.13.97 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 17974.86 ஹெக்டேர் பரப்பளவு பாசன விவசாய நிலங்கள் பயனடையும். சுமார் 250க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவர்.இத்திட்ட பணிகளுக்கு அப்பகுதி ஆயக்கட்டுக்கார்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம், நிர்வாகக்குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 10 சதவீதம் தொகையும், அரசின் பங்களிப்பு 90 சதவீத தொகையுடன், பதிவு பெற்ற விவசாய சங்கத்தின் நியமன முறையில் இப்பணி நடந்து வருகிறது.இப்பணியினை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுக்காரர் சங்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மூன்று கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்படும். முதலவதாக தேர்வாகும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசும், இரண்டு மற்றும் மூன்றாவதாக தேர்வாகும் கிராமத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்’ என்றார்.

Tags : District Collector Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்...