×

விஏஓக்கள் இடமாறுதல் கவுன்சலிங் இழுத்தடிப்பு

சிவகங்கை, செப். 20: சிவகங்கை மாவட்டத்தில் விஏஓக்கள் இடமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.  சிவகங்கை மாவட்டத்தில் 523 வருவாய் கிராமங்களில்(குரூப்) சுமார் 400க்கும் மேற்பட்ட விஏஓக்கள் பணியாற்றி வருகின்றனர். 523 விஏஓக்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் குறைவான விஏஓக்களே பணியில் இருப்பதால் பலர் இரண்டு வருவாய் கிராமங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் ஜமாபந்தி முடிந்தவுடன் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். முதலில் தாலுகாவிற்குள்ளும், பின்னர் கோட்ட அளவிலும் கவுன்சிலிங் நடைபெறும். வருவாய் கிராமங்களில் இரண்டு பிரிவு உள்ளது. இதில் அ பிரிவு கிராமங்களில் பணியாற்றும் விஏஓக்களுக்கு ஓர் ஆண்டு தான் பணிக்காலமாகும். அவர்கள் ஓர் ஆண்டு அந்த இடத்தில் பணி செய்தவுடன் பணி மாறுதல் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு ஜமாபந்தி முடிந்தவுடன் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடத்தப்படவில்லை. தற்போது செப்டம்பர் மாதம் நடந்து வரும் நிலையில் இதுவரை கவுன்சிலிங் நடத்துவதற்கான ஏற்பாடு இல்லை. இது குறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் விஏஓக்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பிற மாவட்டங்களில் கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் நடத்தாதது விஏஓக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறியதாவது: இடமாறுதல் கவுன்சிலிங்கை ஏராளமானோர் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் முடிவடைந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் நடத்தாமல் உள்ளனர். உயர் அதிகாரிகளும் இது குறித்து உரிய பதில் தெரிவிக்க மறுக்கின்றனர். உடனடியாக கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : VAOs Parallax Counseling Pullout ,
× RELATED மது விற்றவர் கைது