×

குடிமராமத்து பணியில் நெல்முடிக்கரை பெரிய கண்மாய் கரைகள், மடைகள் சீரமைப்பு திருப்புவனம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்புவனம், செப். 20: திருப்புவனம் பெரிய கண்மாய் கரைகள், பழுதான மடைகளை குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருப்புவனம் நெல்முடிகரை பெரிய கண்மாய் நான்கு கி.மீ சுற்றளவு கொண்டது. இக்கண்மாய் மூலம் திருப்புவனம் புதூர், நெல்முடிகரை, பழையூர், நைனார்பேட்டை, கலியாந்தூர் உட்பட்ட கிராமங்களை சேர்ந்த 2500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த கண்மாய் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கரைகள் உயர்த்தப்படாமலும், மடைகள் பராமரிக்காமலும் இருந்து வந்தது. இந்நிலையில் குடிமராமத்து  திட்டத்தின் மூலம் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய் 4கிமீ நீளத்திற்கு தூர்வாரி கரை 25 அடி அகலப்படுத்தப்பட்டும், கலுங்குகள் பழுது, இரண்டு மடைகளை பழுதுபார்க்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் சிங்காரவேலு, முத்துராமலிங்கம், சுரேஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து நெல் முடிகரை கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் செல்வம் கூறுகையில், ‘கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகளை   அந்தந்த பகுதி கண்மாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் மூலமாகவே பராமரிக்கவும், பாதுகாக்கவும் துவங்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தில் எங்கள் நெல்முடிகரை கண்மாயை புனரமைக்கவும், கலுங்கு, மடைகளை பழுது பார்க்கவும் விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.7 லட்சமும், அரசின் பங்களிப்பாக ரூ.63 லட்சமும் ஒதுக்கப்பட்டு கரைகளை 25 அடி அகலத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன’ என்றார்.

Tags : Nelmudikarai ,
× RELATED மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்