×

காரைக்குடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

காரைக்குடி, செப்.20: காரைக்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம் கொண்டுவரப்படாததால் மக்கள் நடக்ககூட இடமில்லாத நிலை உள்ளது.  காரைக்குடி பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளதால்,  வெளியூரில் இருந்து இங்கு தங்கி பணி புரிபவர்களும் அதிகமாக உள்ளனர். வளர்ந்து வரும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது.  போக்குவரத்து போலீசார் சார்பில் கல்லூரி சாலை, பெரியார் சிலை, முதல் பீட், இரண்டாம் பீட் ஆகிய இடங்களில் சிக்னல் அமைத்துள்ளனர். இருப்பினும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அம்பேத்கர் சிலை, கழனிவாசல் பகுதியில் அமைக்கப்பட்ட   சிக்னல்கள்  இதுவரை செயல்பாட்டுக்கு வராமலேயே  கிடப்பில் போடப் பட்டுள்ளது. செக்காலை ரோட்டில் உள்ள கடைகளுக்கு வருபவர்கள் சாலையை மறைத்து இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர்.  இச்சாலை வழியாக தேவகோட்டை, ராமேஸ்வரம், பரமக்குடி செல்லும் பஸ்கள், கொப்புடைய அம்மன் கோயில் மற்றும் கல்லுக்கட்டி, பழைய பஸ் ஸ்டாண்டு கோவிலூர் பகுதிகளுக்கு செல்லும் டூவீலர்கள்  நெரிசலில் சிக்கி கொள்கின்றன. தவிர பாதசாரிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாமல் சாலையில் தான் நடந்து செல்கின்றனர். இதனால் வாகனங்கள் அவர்கள் மீது மோதுவது வாடிக்கையாகி வருகிறது.

அம்மன் சன்னதி, கல்லுகட்டி பகுதிகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்களின் கார்களை நிறுத்த  கொப்புடைய அம்மன் கோயில் குளத்தை சுற்றி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனை முறையாக செயல்படுத்தினால் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவது குறையும். அதேபோல் தேவகோட்டை மற்றும் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை மாற்ற வேண்டும். செக்காலை ரோடு, கல்லுகட்டி, அம்மன் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை, நகராட்சி  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகனங்களை ஒழுங்குபடுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 சமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில்,    காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அதிக அளவில் செக்காலை ரோட்டில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். நகரின் வளர்ச்சி, வாகன வளர்ச்சிக்கு ஏற்ப சாலைகள் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்க சம்மந்தப்பட்ட துறையினர் பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமலேயே கிடப்பில் போட்டுள்ளனர். சாலையை மறைத்து வாகனங்கள் நிறுத்துவதால் நடந்து செல்வோர் மிகவும் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. இச்சாலையில் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு அதன்பிறகு நடவடிக்கை எடுக்காமல் உரிய துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணன் பஜார் பகுதியில் சாலையை அடைத்து கடைகள் போடப்பட்டுள்ளதை கட்டுப்படுத்த வேண்டும். இப்பகுதியில் டூவீலர் நிறுத்த அனுமதிக்க கூடாது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று ஏற்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags : Motorists ,Karaikudi ,
× RELATED திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து...