×

மாலையில் உயிர் உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை, செப். 20: விவசாயிகள் உயிர் உரங்கள் பயன்படுத்த முன் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உயிர் உர உற்பத்தி மையம் 2016ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் காற்றிலுள்ள நைட்ரஜன் சத்தை தழைச்சத்தாக மண்ணில் நிலைநிறுத்தியும், மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரையும் மணிச்சத்தாக மாற்றியும், பயிருக்கு வழங்கும் நன்மை தரும் நுண்ணுயிரிகளே உயிர் உரங்கள் ஆகும். ரசாயன உரங்களின் தொடர்ச்சியான பயன்பாடு அதிகரித்து வருவதால் மண் வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதனை தவிர்த்திட விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக பாக்டீரியாவை பிரித்தெடுக்கும் வடிகட்டுதல் அமைப்பு தொழில் நுட்பம் பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. உயிர் உரங்கள் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மண்ணின் உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது. பயிர்களுக்கு வறட்சியை தாங்கி வளரும் சக்தியை அளிக்கிறது. மண் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. திரவ உயிர் உர உற்பத்தி மையம் நமது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளதால் விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வெளியூர் வியாபாரிகள் வராததால்...