×

பொருளாதார வீழ்ச்சியால் தேங்காய், நெல், கரும்பு விற்ற பணம் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை

விருதுநகர், செப்.20: பொருளாதார வீழ்ச்சியால் தேங்காய், நெல், கரும்பு விற்ற பணம் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறலுடன் தெரிவித்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில், டிஆர்ஓ உதயகுமார் முன்னிலையில் நடைபெற்றது. குறைதீர் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் அருணாசலம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் விவசாயிகள்: இ.அடங்கல் நடைமுறையால் இ.அடங்கலில் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு வேளாண் கடன், நகை கடன் வழங்க மறுக்கும் நிலை உள்ளது.கூட்டுறவு வங்கி அதிகாரி: இ.அடங்கல் அல்லது விஏஓ சான்றிதழ் வைத்து கடன் வழங்க தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் சிவஞானம்: இ.அடங்கல் விவசாயிகளுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ.அடங்கல் பதிவு பெரிய கஷ்டமான நடைமுறையில்லை. பதிவு செய்து வைத்துக் கொண்டால் அனைத்து நடைமுறையும் எளிதாகும் என்றார்.

விவசாயி இருளப்பன்: சிஆர் 1009 விதை நெல் மூலம் ஏக்கருக்கு 55 மூடை நெல் கிடைக்கிறது. இந்த நெல் விதைகள் தாராபுரம் வேளாண் அலுவலகத்தில் இருப்பில் உள்ளது. விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு சிஆர் 1009 விதை நெல் கொள்முதல் வழங்கிட வேண்டும்.இணை இயக்குநர் அருணாசலம்: மாவட்டத்தில் தேவையான விதை நெல், உளுந்து, பயறு, சூரியகாந்தி, குதிரைவாலி, எண்ணெய் வித்துக்கள், பருத்தி விதைகள் தேவையான அளவிற்கு இருப்பில் உள்ளது. சிஆர் 1009 நெல் ரகம் 150 நாட்கள் கால அளவில் பலன் தரும். இந்த நெல் தேவைப்படுவோர் விபரம் தெரிவித்தால் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்றார்.விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன்: நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் காட்டுப்பன்றி அதிக அளவில் உள்ளது. நிலக்கடலை பயிர்களை வேரோடு சாய்த்து வருகிறது. காட்டுப்பன்றிகளை ஒழிக்க உத்தரவிட வேண்டும்.

வனத்துறை ஆய்வாளர்: கண்மாய்களில் கருவேல மர முட்செடிகள் அதிகம் இருப்பதால் பிடிக்க முடியவில்லை.(விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து விவசாயிகள் கூட்டத்தில் வனத்துறை அதிகாரி வருவதில்லை. விவசாயிகள் கூட்டமும் நடத்துவதில்லை. காட்டுப்பன்றிகள், மான்களால் விவசாயிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்றனர்.)வாடியூர் விவசாயிகள்: வாடியூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடக்கவில்லை. ஊரணி, தடுப்பணைகள் செய்தால் அர்ஜுனா நதிக்கு செல்லும் தண்ணீரால் விவசாயம் செய்யமுடியும். பொதுப்பணித்துறையினரிடம் தெரிவித்தால் எங்களை படம் வரைந்து கொண்டு வர சொல்கின்றனர். நாங்கள் விவசாயிகள், பொறியியல் படிக்காதவர்கள் என்றனர்.
கலெக்டர் சிவஞானம்: மாவட்டத்தில் 106 சிறு கண்மாய்கள், 906 குளங்களில் மராமத்து பணிகள் நடக்கிறது. வாடியூர் கண்மாயை உடனே தூர்வார உத்தரவு தருகிறேன் என்றார்.

ராமச்சந்திர ராஜா: பொருளாதார மந்த நிலையால் தேங்காய், நெல், கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் தரமறுக்கின்றனர். மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடக்கிறது. நம்மை விட தென்னை விவசாயம் குறைவாக நடக்கும் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு கொப்பரையை கொள்முதல் செய்கின்றனர். அரசு கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென்றார்.மம்சாபுரம் விவசாயிகள்: மம்சாபுரத்தில் 2006ல் இருந்து ஊரணிக்கு வரும் நீர்வரத்து பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதால் ஊரணிக்கு தண்ணீர் வரவில்லை. 250 ஏக்கர் பாலைவனமாக காட்சி தருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தனி ஒருவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். 2006 முதல் மனு அளித்தும் தனிநபர் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற மறுக்கின்றனர்.

டிஆர்ஓ உதயகுமார்: விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார். விஜயமுருகன்: படைப்புழு தாக்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு மானாவரிக்கு ரூ.7,450, இறவைக்கு ரூ.13,410 கொடுக்க வேண்டும். ஆனால் குறைவான தொகையை வழங்கி வருகின்றனர்.கலெக்டர் சிவஞானம்: மாவட்டத்திற்கு கேட்ட தொகை ரூ.22.2 கோடி வந்துள்ளது. அடங்கலில் உள்ள பரப்பளவிற்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. தவறு நடந்து இருந்தால் சரி செய்வோம் என்றார்.பாவாலி விவசாயிகள் பாண்டியராஜன், பெரிய முத்தையா: பாவாலி கண்மாய் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் 40 அடி ஆழத்திற்கு தோண்டி சரள் மண் அள்ளி வருகின்றனர். தினசரி 100 லாரி மண் அள்ளப்படுகிறது. கண்மாய்க்கு நீர் வருவதற்கு வழியின்றி போய்விட்டது. முறையற்ற அனுமதியால் மண் அள்ளி உருவான மெகா பள்ளங்களை மூடவும். கண்மாய்க்கு தண்ணீர் வருவதற்கான உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து நூற்றுக்கணக்கான விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென்றனர்.Tags : downturn ,
× RELATED அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனையும் அவலம்