×

கல்லாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க நீர்வள துறையினர் ஆய்வு

ஆத்தூர், செப்.20:  ஆத்தூர் அருகே கல்லாற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்க, நீர்வள துறை பொறியாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆத்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் பங்கேற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில், கல்பகனூர், ராமநாயக்கன்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட விவசாயிகள், கல்லாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க வேண்டும் என மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று சேலம் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர்வள மேம்பாட்டு துறை உதவி பொறியாளர்கள் சத்யா, அழகேசன், சசிகலா, சீனிவாசன் கொண்ட குழுவினர், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள கல்லாறு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கல்லாறு நீர்தேக்கம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்களது 20 ஆண்டு கால கோரிக்கையான கல்லாறு நீர்த்தேக்க திட்டம் அமைக்க, கடந்த முறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது வனத்துறையினர் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை எழுந்ததால், திட்டம் கைவிடப்பட்டது. தற்போது தமிழக முதல்வரிடம், நாங்கள் கொடுத்த மனுவின் மீது அக்கறை எடுத்து அதிகாரிகள் குழுவினை அனுப்பி ஆய்வு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பயன்பெறும்,’ என்றனர்.

Tags :
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு