×

காண்ட்ராக்டருக்கு 2 ஆண்டு சிறை

சேலம், செப். 20: சேலம் அருகே காண்ட்ராக்டரை தாக்கிய இன்னொரு காண்ட்ராக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம்(42). காண்ட்ராக்டர். இவர் கடந்த 2013ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம்தேதி, 10 பேருடன் அதே ஊரைச்சேர்ந்த கணேசன் என்பவர் வீட்டிற்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்குவந்த அதே ஊரைச்சேர்ந்த செந்தில்(40) என்பவர், சண்முகத்தை கட்டையால் தாக்கியதுடன், ஜாதி பெயரை சொல்லி திட்டினார். இதில் காயம் அடைந்த சண்முகம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார், காண்ட்ராக்டர் செந்தில் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் புகார்தாரரான காண்ட்ராக்டர் சண்முகம் இறந்துபோனார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, காண்ட்ராக்டர் செந்திலுக்கு கொடுங்காயம் ஏற்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ₹2ஆயிரம் அபராதமும், வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Tags :
× RELATED த்ரிஷ்யம் 2ம் பாகம்: மோகன்லால் தீவிரம்