தம்மம்பட்டி அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் தீ ₹10 லட்சம் பொருட்கள் நாசம்

தம்மம்பட்டி, செப்.20:  தம்மம்பட்டி அருகே, 3 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹10 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமானது.  தம்மம்பட்டி அருகே, உடையார்பாளையம் ஸ்டேட் பேங்க் எதிரில் கிருஷ்ணமூர்த்தி (30) என்பவர் ஸ்கூல் பேக் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவரது கடையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்நிலையில், தீ மளமளவென பரவி அருகே இருந்த மோகன்தாஸ் என்பவருக்கு சொந்தமான இரும்புகடை, சண்முகம் என்பவரின் மீன் கடையில் தீ பற்றி எரியத்தொடங்கியது.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விசாரணையில் மின்கசிவின் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், 3 கடைகளிலும் இருந்த ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து, தம்மப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி அப்பகுதியினர் கூறுகையில், ‘தம்மம்பட்டி பகுதியில் தீ விபத்து ஏற்படும் போது, கெங்கவல்லியில் இருந்து தான் தீயணைப்பு துறையினர் வருகின்றனர். இதனால் அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது. எனவே, இதை தவிர்க்க தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்,’ என்றனர்.

Advertising
Advertising

Related Stories: