ஓமலூர் அருகே சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள்

ஓமலூர், செப்.20:  ஓமலூர் அருகே மாட்டுக்காரனூர் அரசு பள்ளியின் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

ஓமலூர் அருகேயுள்ள மாட்டுக்காரனூர் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓட்டுக் கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் இரண்டு ஓட்டு கட்டிடங்கள், மிகவும் சேதமடைந்து மழை காலங்களில் மழை தண்ணீர் ஒழுகி வகுப்பறையில் கொட்டுகிறது. பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்துள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் குழந்தைகளின் கழிவறை சுவர் 100 அடி தூரம் இடிந்து விழுந்துள்ளது. அப்போது குழந்தைகள் யாரும் கழிவறை பகுதிக்கு செல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

 பள்ளியை சுற்றி புதர் மண்டி கிடக்கிறது. இதனால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், ஓமலூர் எம்எல்ஏ ஆகியோரிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சியாமளா, பள்ளிக்கு வந்து பார்வையிட்டு சென்றார். அப்போது, அப்பகுதி மக்கள், உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்து தருமாறு கேட்டனர். மேலும், பள்ளியை சீரமைத்து தராவிட்டால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Related Stories: