×

அந்தரங்க படத்தை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல்

நாமக்கல், செப்.20: நாமக்கல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்எஸ்ஐ சந்திரசேகரன். இவரது மகன் திருமுருகன்(20). நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது மொபைல் போனை, கல்லூரியில் உடன் படிக்கும் நண்பர்கள் வாங்கி வாட்ஸ்அப் தகவல்களை பார்த்துள்ளனர். கடந்த 4ம் தேதி கல்லூரியில் வைத்து திருமுருகனின் மொபைல் போன் திருட்டு போனது. இதனால், பெற்றோர்கள் அவருக்கு புதிய மொபைல் போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திருமுருகனின் புதிய மொபைல் வாட்ஸ் அப்பில் அவருடன் படித்து வரும் மாணவியர் சிலருடன் மாணவர் திருமுருகன் இருக்கும் போட்டோக்கள் வந்துள்ளது. அந்த போட்டோக்களை பார்த்து திருமுருகன் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, அவரை மொபைலில் தொடர்பு கொண்ட சிலர், இந்த போட்டோக்களை யூடியூப்பில் போடாமல் இருக்கவேண்டும் என்றால் ₹20 ஆயிரம் தரவேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளனர். இதனால், பயந்து போன திருமுருகன் ரூ.15 ஆயிரம் தர சம்மதித்துள்ளார். பணத்துடன், நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகில் கொண்டு வரும் படி கூறியுள்ளனர். அதன்படி, நேற்று திருமுருகன் தியேட்டர் அருகே சென்றபோது, அங்கு கல்லூரியில் ஒன்றாக படித்து வரும், ஈஸ்வரமூர்த்திபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(20), மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்(20) ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம், பணம் கொண்டு வரவில்லை என திருமுருகன் கூறியதால், ஆத்திரமடைந்த இருவரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து திருமுருகன் நாமக்கல் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய வசந்தகுமார் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags : College student ,murder ,
× RELATED காட்பாடியில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி