×

உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பம் விநியோகம்

உடுமலை,செப்.20: உடுமலையில் புதிதாக துவங்க உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் துவங்கியது. ஏராளமான பெற்றோர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். உடுமலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே வகுப்புகள் துவங்கி நடைபெற உள்ளது. தற்போது ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் இந்த பள்ளி செயல்படுகிறது. முதல்கட்டமாக பொறுப்பு முதல்வர், 4 ஆசிரியர்கள், ஒரு உதவி சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வகுப்புக்கு 40 பேர் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது. உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளி முதல்வர் (பொறுப்பு) மேகநாதன் விண்ணப்பம் விநியோகத்தை துவங்கி வைத்தார்.

விண்ணப்பம் விநியோகம் பற்றி தகவல் அறிந்ததும், அதிகாலை 4 மணி முதலே பள்ளி வளாகத்தில் பெற்றோர் திரள துவங்கினர். காலையில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். முதலில் 300 டோக்கன் வழங்கப்பட்டு இலவசமாக விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இன்றும் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளியில் வழங்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 3ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுமா, அல்லது எந்த அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : Udumalai Kendriya Vidyalaya School ,
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு