×

பணிக்கொடை வழங்கக்கோரி டேன் டீ அலுவலகம் முற்றுகை

பந்தலூர், செப்.20: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ தொழிலாளர்கள் பணிக்கொடை வழங்க கோரி  சேரம்பாடி  டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக டேன்டீ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வால்பாறை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அண்மை காலமாக டேன் டீ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடைகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதால் டேன்டீ தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சேரம்பாடி டேன்டீ பகுதியில் பணி ஓய்வு பெற்ற 80 தொழிலாளர்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் தங்களுக்கு பணிக்கொடைகள் வழங்கப்பட்டு விட்டது என அவரவர் குடியிருப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை சேரம்பாடி டேன் டீ தோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டேன்டீ நிறுவாகம் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தொலைபேசி மூலம் டேன்டீ மேலாண்மை இயக்குனரை தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேசினார்.

அதன்பின் டேன்டீ பொதுமேலாளர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்கு வந்து எம்எல்ஏ., முன்னிலையில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணிக்கொடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அவர்கள் தகுந்த விளக்கம் கொடுத்தால் தங்களுடைய வீடுகளை காலி செய்ய தேவையில்லை, தற்காலிக தொழிலாளர்களாக டேன்டீயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரிசு அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என பொதுமேலாளர் தொழிலாளர்களிடம் உறுதி கூறினார். அதன்பின் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதில், திமுக மாவட்ட பிரதநிதி கணபதி, திமுக நெல்லியாளம் நகர துணை செயலாளர் சிவசுப்ரமணியம், சிபிஎம் ரமேஷ், மணிகண்டன், பன்னீர்செல்வம் முன்னால் கவுன்சிலர் வடிவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Siege ,Danny Dee ,
× RELATED தாசில்தார் அலுவலகம் முற்றுகை