×

தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர்

ஈரோடு, செப்.20:  தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சூரம்பட்டி அணைக்கட்டிற்கு கீழ்பவானி கசிவுநீர் மற்றும் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால் அணைக்கட்டு முழுமையாக நிரம்பி உபரிநீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் பெரும்பள்ளம் ஓடையில் வீணாக வெளியேறி வரும் நிலையில் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தின்கீழ், லட்சுமிகார்டன் என்ற பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. வழக்கமாக, கீழ்பவானியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கசிவுநீர் சூரம்பட்டி அணைக்கட்டு வந்தடைய குறைந்தது ஒரு மாத காலத்திற்கு மேலாகும். ஆனால், இந்தாண்டு மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரும், கசிவு நீரும் சேர்ந்து வருவதால் வேகமாக சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பிவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் திடீரென்று பணிகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags : dam ,Surampatti ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்