மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை கண்காணிக்க 300 பணியாளர்கள் நியமனம்

ஈரோடு, செப். 20: மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை கண்காணிக்க 300 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையிலும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும் நேற்று கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். டெங்கு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர். சுகாதாரமற்ற முறையில் குப்பைகளை வைத்திருந்தது தொடர்பாக ஒருவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில் மாடி பகுதிகளில் வைத்துள்ள பழைய பொருட்களை அகற்ற வேண்டும். சின்டெக்ஸ் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து விட வேண்டும். காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் 300 வீடுகளை ஒருவர் கண்காணிக்கும் வகையில் நிரந்தர மற்றும் குழு பணியாளர்கள் 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் 50 வீடுகள் வீதம் சென்று ஆய்வு செய்வார்கள். அனைத்து பணிகளுக்கும் நிலவேம்பு குடிநீர், காய்ச்சல் வந்தால் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிகளை பொருத்தவரை ஆயிரத்து 200 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களை கொண்டு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள், அபேட் மருந்துகள் தெளித்தல், புகை மருந்துகள் அடித்தல் போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி, பொறியாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் தங்கராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: