×

காவேரிப்பட்டணத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஓசோன் மண்டலத்தை காப்பது நம் அனைவரின் கடமையாகும்

காவேரிப்பட்டணம், செப்.20: ஓசோன் மண்டலத்தை காப்பது நம் அனைவரின் கடமையாகும் என காவேரிப்பட்டணத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.காவேரிப்பட்டணத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் ஜேசீஸ் கிளப் சார்பில், சர்வதேச ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலர் பவுன்ராஜ், ஜேசீஸ் சங்க செயலர் ஜோதிபிரகாஷ், உதவித் தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கருத்தரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா ஆகியவை நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலர் பவுன்ராஜ் கூறுகையில், பூமியைச் சுற்றி ஓசோன் மண்டலம் உள்ளது. சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்களின் வெப்பத்தை ஓசோன் மண்டலம் தடுக்கிறது. அவ்வாறு தடுக்காவிட்டால், நேரடியாக சூரிய வெப்பம் பூமி மீது படிந்து புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உண்டாக்கும். எனவே, ஓசோன் மண்டலத்தை காப்பது நம் அனைவரின் கடமையாகும் என்று கூறினார். பின்னர், பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. சர்வதேச ஓசான்தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை ஜேசீஸ் சங்க தலைவர் சிவானந்தம் தொடக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி சேலம் மெயின் ரோடு, பனகல் தெரு, அரசமரத்தெரு, பாலக்கோடு சாலை வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. வழியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பேரணியில் தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கம், ஜூனீயர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 625 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஜேசீஸ் சங்க நிர்வாகிகள் யாரப்பாஷா, சக்திவேல், சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோபு, கதிரவன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை மாணவர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், துணை ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.



Tags : ozone zone ,
× RELATED ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி