×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், செப்.20: கெலவரப்பள்ளி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், விநாடிக்கு 488 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திமலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 328 கனஅடியானது. மதியம் 400 கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து, மாலை 5 மணிக்கு விநாடிக்கு 488 கனஅடியானது. நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் 41.82 அடியாக உயர்ந்துள்ளது(முழு கொள்ளளவு 44.28 அடி).

இதனால், நேற்று மாலை 6 மணி முதல் அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஆற்றில் நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்துச் செல்கிறது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், இன்று அல்லது நாளை(21ம் தேதி) கிருஷ்ணகிரி அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 37.55 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 96 கனஅடியாக உள்ள நிலையில், முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 159 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 0.46 டிம்சியாக உள்ளது. முன்னதாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை மாதேப்பட்டி வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Tags : Kelavarapalli Dam ,
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...