×

தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய நகராட்சி தக்காளி மார்க்கெட்

தர்மபுரி, செப்.20: தர்மபுரியில் தொடர் மழை பெய்து வருவதால், நகராட்சி தக்காளி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் சந்தைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி சந்தைபேட்டையில், நகராட்சி தக்காளி மார்க்கெட் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணாபுரம், திப்பம்பட்டி, இருமத்தூர், அதகப்பாடி, இண்டூர், பி.அக்ரகாரம், முக்கல்நாயக்கன்பட்டி, சோலைக்கொட்டாய், வெள்ளோலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, தினசரி 20 டன்னுக்கு மேல் தக்காளியை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் வியாபாரம், காலை 6 மணிக்கு முடிந்து விடும். மார்க்கெட்டில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் தக்காளியை வைத்து யாரும் வியாபாரம் செய்வதில்லை. மார்க்கெட்டின் வளாகத்தில் வைத்து, கூடையில் தக்காளி கொண்டு வந்து வியாபாரம் செய்து விட்டு விவசாயிகள் சென்று விடுகின்றனர். தக்காளி மார்க்கெட் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

தர்மபுரியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மார்க்கெட்டில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் இல்லாததால், மழைநீர் தேங்கி கழிவுகளுடன் கலந்து,  தக்காளி மார்க்கெட் வளாகம் முழுவதுமாக சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மார்க்கெட்டிற்குள் வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். சேற்றில் வழுக்கி விழுந்து அடிபடுகின்றனர். ஆடைகள் சேறுபட்டு வீணாகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தக்காளி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் வடிகால் அமைத்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி தக்காளி மார்க்கெட்டிற்கு 15 ஆண்டுகளுக்கு முன் 100 டன் தக்காளி வரும். தற்போது வெகுவாக குறைந்து விட்டது. வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து தக்காளி வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் சில நேரங்களில் மிரட்டப்படுகின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைகளின் மேற்கூரை இல்லாமலும், உடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகிறது. தவிர, மார்க்கெட்டில் சிலர் கால்நடைகள் கட்டி வைத்து வளர்த்து வருகின்றனர். இதனால் சந்தை வளாகம் மழை காலத்தில் சேறும்,  சகதியுமாக மாறி விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சந்தையை சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்