×

சிறிய அஞ்சலகங்களை மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்எம்எஸ் ஊழியர் சங்கம் தர்ணா

திருச்சி, செப்.20: திருச்சியில் உள்ள ஆர்எம்எஸ் தலைமை அலுவலகத்தில் திருவண்ணாமலை அஞ்சல் பிரிப்பகத்தை மூடும் முடிவை கைவிடக்கோரி அஞ்சல் ஊழியர்கள் ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டனர்.திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை அஞ்சல் பிரிப்பகத்தை (ஆர்எம்எஸ்) வரும் அக்டோபர் மாதம் மூடப்படுவதாக அஞ்சல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் திருவண்ணாமலை அஞ்சல் பிரிப்பகத்தை விழுப்புரத்தோடு இணைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும், சிறிய அஞ்சலகங்களை மூடுவதை கைவிடக்கோரியும், ஆட்குறைப்பு செய்யக்கூடாது, திண்டிவணம், அரியலூரில் இரவு நேர ஆர்எம்எஸ் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஆர்எம்எஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் அடையாள தர்ணா போராட்டம் நடந்தது. ரயில்வே மெயில் சர்வீஸ் சங்க கோட்ட தலைவர் குணசேகரன், தேசிய தபால்தந்தி ஊழியர் சங்கம் கோட்ட தலைவர்கள் ரமேஷ், செலாஸ்டின் ரத்தினசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : Anti-RMS Employees Union ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை