×

மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக இன்ஸ்பெக்டரிடம் 1 லட்சம் மோசடி: தனியார் ஏஜென்சியிடம் போலீசார் விசாரணை

சென்னை: வெளிநாட்டில்  மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக இன்ஸ்பெக்டரிடம் 1 லட்சம் மோசடி செய்த தனியார் ஏஜென்சியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பல்லாவரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஷாலினி (45). இவர், சென்னை சிபிசிஐடி தலைமை இடத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் மேரி. பிளஸ் 2 முடித்துள்ளார். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தமிழகத்தில் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை. அதேநேரம் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க வேண்டும் என்று ஷாலினி பலநாள் கனவாக இருந்துள்ளார். இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள வெளிநாட்டு கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை அணுகியுள்ளார். அவர்கள், போலந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதற்காக 1 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.

அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் ஷாலினி 3 மாதங்களுக்கு முன்பு ஏஜென்சி நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த ஏஜென்சி நிறுவனம் சொன்னபடி மருத்துவ சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை நேரில் கேட்டும் ஏஜென்சி நிர்வாகிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் மருத்துவ சீட்டிற்காக கொடுத்த 1 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஷாலினி, தனியார் ஏஜென்சி நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் பணத்தை பெற்று தர வேண்டும் என்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி போலீசார் தனியார் ஏஜென்சி நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரிடமே 1 லட்சம் மோசடி ெசய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : inspector ,Police investigation ,agency ,
× RELATED திருவிக நகர் மண்டலத்தில்...