வகுப்பறையில் மழைநீர் தேங்கியதால் சிரமத்துடன் தேர்வு எழுதிய மாணவர்கள்: சிதிலமடைந்த மேற்கூரையால் அவலம்

திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பலத்த காற்றுடன் மழை  பெய்தது. இதனால், திருவொற்றியூர் ஜோதி நகர், ஜெய்ஹிந்த் நகர், ஒற்றைவாடை தெரு, சத்யமூர்த்தி நகர் போன்ற பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இப்பகுதி முழுவதும் உள்ள மழைநீர் கால்வாய் பல மாதமாக தூர் வாரப்படாததால் குப்பை குவியலால் தூர்ந்து, மழைநீர் வெளியேற முடியாமல் தெருவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மணலி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் சிரமத்துடன் சென்றன. திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிதிலமடைந்துள்ளதால், மழைநீர் கசிந்து வகுப்பறையில் மழைநீர் தேங்கியது. உள்ளே இருந்த மாணவ, மாணவியர் அமரும் டேபிள், இருக்கை போன்றவைகளும் தண்ணீரில் நனைந்தது.

மேலும், மின்விளக்கு, மின்விசிறி போன்றவைகளும் மழையால் நனைந்ததால் வகுப்பறையில் மாணவர்களை அமர வைத்தால் அசம்பாவிதம் ஏற்படும் எனக்கருதி, பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டனர். நேற்று காலாண்டு தேர்வு என்பதால் பெரும் சிரமத்துடனே மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிப்பதில்லை. நகராட்சியாக இருக்கும்போது மழை காலத்திற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் தற்போது எந்த அதிகாரிகளும் அதுபோல் செய்வதில்லை.

 மேலும் கார்கில் நகர் தொடக்கப் பள்ளியில் 1.20 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்ட அரசாணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளதால் தற்போது பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் மழையில் நனைந்தபடியே பள்ளி மாணவ, மாணவர்கள் பாடம் படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே உடனடியாக மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். கிடப்பில் உள்ள பள்ளி கட்டிட பணியை விரைந்து துவங்க வேண்டும்,’’ என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு:

பலத்த காற்றுடன் மழை காரணமாக எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பு அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் சொல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று அதிகாலை  அந்த  வழியாக மாநகரப் பேருந்து மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

Related Stories: