×

கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வாகன விபத்தில் 182 பேர் பலி எஸ்பி பாண்டியராஜன் தகவல்

குளித்தலை, செப். 20: கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் வாகன விபத்துக்களில் 182 பேர் பலியாகி உள்ளனர் என்று எஸ்பி பாண்டியராஜன் தெரிவித்தார்.கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி கும்மராஜா தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி பாஸ்கரன், காவல் ஆய்வாளர் திருமலைராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்பி பாண்டியராஜன் பொதுமக்கள் 50 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆனால் இப்பகுதி பொதுமக்கள் இதனுடைய அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பயணம் செய்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் நூறு விபத்துக்கள் நடக்கிறது என்றால் அதில் 95 பேர் ஹெல்மெட் அணியாத காரணத்தினால் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வேகத்தை குறைத்து செல்ல வேண்டும். இடது புறம் வலது புறம் சாலையில் உள்ள பாதையை தெரிந்துகொண்டு கடந்து செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும் பொழுது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும் குழந்தைகளை வாகனத்தில் பின் பக்கத்தில் அமரவைத்து ஏற்றி செல்லக்கூடாது. தாங்கள் வைத்திருக்கும் வாகனங்களை அவ்வப்போது பராமரிப்பு செய்ய வேண்டும்.

சென்ற ஆண்டு சாலை விபத்தில் மட்டும் கரூர் மாவட்டத்தில் 182 பேர் இறந்துள்ளனர். அதனால் வரும் காலங்களில் சாலை விதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து விபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பெரியார் நகரில் தொடங்கி கடைவீதி, பஜனை மடம், பெரியார் தெரு, காந்திசிலை, நீதிமன்றம், கடம்பர் கோவில், சுங்க கேட், வைகை நல்லூர் அக்ரஹாரம், அண்ணாநகர், காவேரி நகர், ரயில் நிலையம் வழியாக பெரிய பாலம் வந்தடைந்தது.பேரணியில் இருசக்கர வாகன ஏஜென்சி ஊழியர்கள் மற்றும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Karur ,district vehicle accident ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...