×

காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளி, மார்க்கெட், குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்

காஞ்சிபுரம், செப்.20: காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக இரவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒலிமுகமதுபேட்டை அரசு பள்ளி, ராஜாஜி மார்க்கெட், வைகுண்டபெருமாள் கோயில் தெரு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் எதிரில் ரயில்வே சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இங்கு தினமும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள்.நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் இங்கிருந்து தினமும் காய்கறிகள் சப்ளை ஆகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருவதால், மார்க்கெட் எதிரில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோல் ஒலிமுகமதுபேட்டை நகராட்சி பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேங்கியுள்ள மழைநீரில் விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்கு தொற்று நோய் ஏற்படுமோ என பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலும் ஆஸ்பிட்டல் சாலை எதிரில் வைகுண்ட பெருமாள் கோயில் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழை தொடங்கிய நாள்முதல், தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதை அகற்றுவதற்கு, நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags : school ,Kanchipuram ,areas ,
× RELATED அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர...