×

மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும்

திருப்போரூர், செப்.20: மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தை பாம்புக்கடி, அவசர சிகிச்சை, மகப்பேறு, விபத்து ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் மானாம்பதி கிராமம் அமைந்துள்ளது. இதைச்சுற்றி அருங்குன்றம், பெரியவிப்பேடு, திருநிலை, ஒரகடம், காரணை, குண்ணப்பட்டு, ஆமூர், சிறுதாவூர், முள்ளிப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மானாம்பதி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மானாம்பதி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், சிறிய கட்டிடத்தில் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2014ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டி செயல்பட தொடங்கியது. இங்கு, தற்போது வரை ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு ரத்த பரிசோதகர், ஒரு உதவியாளர் பணியில் உள்ளனர்.

காலை 8 மணிக்கு திறக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் மாலை 4 மணியளவில் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாலை மற்றும் இரவு நேரங்களில் பாம்புக்கடி, அவசர சிகிச்சை, மகப்பேறு, விபத்து ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.குறிப்பாக பிரசவத்துக்கு 25 கிமீ தூரம் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், நாய்க்கடி, பாம்புக்கடி உள்ளிட்ட விஷ முறிவு மருந்துகள் போதிய அளவில் சப்ளை செய்யப்படுவதில்லை. இதனால் நோயாளிகள், வெளியில் உள்ள கடைகளில் இருந்து மருந்துகள் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

கிராமப்புற மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பொது மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அனைத்து வசதிகள், படுக்கைகள், கூடுதல் மருத்துவர்கள், இரவு நேர மருத்துவம், பிரசவம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : hospital ,Manampathi Primary Health Center ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...