×

புதிய கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு மறைமுக சூழ்ச்சி

மதுராந்தகம், செப். 20: மதுராந்தகம் அருகே இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு மறைமுக சூழ்ச்சி மூலம் புதிய கல்வி திட்டத்தை அமல்படுத்த நினைக்கிறது என பேசினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள், மறைந்த மாவட்ட செயலாளர் கலைவடிவன் படத்திறப்பு விழா, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் புக்கத்துறை கிராமத்தில் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர்  சூ.க.ஆதவன்  தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் தி.வ.எழிலரசு வரவேற்றார். செங்கை தமிழரசன், தேவ அருள்பிரகாசம், ராஜ்குமார், கலை கதிரவன், தமிழினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு, இரட்டைமலை சீனிவாசன்  படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த மாவட்ட செயலாளர் கலைவடிவன் குடும்பத்துக்கு ₹8 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர், திருமாவளவன் பேசுகையில், மத்திய அரசு மறைமுக சூழ்ச்சி மூலம் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்த நினைக்கிறது. இந்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல. இந்தியும் ஒரு மொழி, விருப்பம் உள்ளவர்கள் அதை கற்றுக் கொள்ளலாம். சமாதான கொள்கை மூலம் புதிய கல்வி திட்டத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. 1968ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தவில்லை என்றால், தமிழகத்தில் இந்தி மொழியை திணித்து இருப்பார்கள். தமிழகத்தில் இந்தி எடுபடவில்லை என்பதால், நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் மோடி வித்தை தமிழகத்தில்  எடுபடவில்லை. பள்ளிகளில் மோடி அரசின் சதித்திட்டம், அவர்கள் குலத்தொழிலை செய்வதற்காக புதிய கல்வித் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த கொள்கையை மாநில அரசு அமல்படுத்தாத நிலையில் தமிழக அரசு மட்டும் இந்த ஆண்டே இந்த கல்வி திட்டத்தை கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. 5  மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகவும்.

 தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் இல்லை. கல்விக் கொள்கைக்கு எதிராக முதலில் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் துணிச்சலாக கூறுவதற்கு காரணம் எங்களுடைய கை சுத்தம். எனவே ஒருபோதும் தமிழகத்தில் இந்தியை திணிக்க விடமாட்டோம் என்றார். இதில், நிர்வாகிகள் விடுதலை  செழியன், பாசறை செல்வராஜ், கதிர்வாணன், தயாநிதி, பன்னீர்செல்வம், குப்பன்,  சண்முகம், ஜீவானந்தம், சீனு, வாசுதேவன், தயாளன், பிரபு, அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் க.முகிலன் நன்றி கூறினார்.

Tags : government ,
× RELATED மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்...