×

மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர், செப். 20: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், கடந்த இரு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழையளவு 876 மி.மீட்டர். இது கடந்த 10 ஆண்டுகளின் மொத்த சராசரியாகும். இதில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையே விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் மட்டத்திற்கும் பெரிதும் உதவுகிறது.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் நடப்பு ஆண்டு எதிர்பார்த்த மழை பொழியவில்லை. இதனால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி விவசாயம் பாதித்ததோடு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் மாவட்டத்தில் பல பகுதியில் குடிநீர் பிரச்னையும் தலைதூக்கியது. இதனால் பல இடங்களில் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி கடந்த சில தினங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்தது. நள்ளிரவு முதல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால், விவசாயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை, விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையால் திருவள்ளூர் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆவடி நெடுஞ்சாலை, சி.வி.நாயுடு சாலை, பஸ் நிலையம் உட்பட பல பகுதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் ஓடியது. கால்வாய்கள் சீராக இல்லாததாலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பையை கால்வாயில் கொட்டுவதாலும் மழைநீர் வெளியேற முடியாமல் தெருக்களில் வந்தது. மேலும் திருவள்ளூர், புட்லூர், வேப்பம்பட்டு, கடம்பத்தூர், பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். காக்களூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர் அம்சா நகர், புங்கத்தூர், எம்.ஜி.ஆர் நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் குளமாக தேங்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில், அதிகப்பட்சமாக திருவள்ளூரில் 216 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 29 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் காலனி அருகே இருந்த 200 ஆண்டு பழமையான ஆலமரம் நேற்று காலை பலத்த மழை காரணமாக வேரோடு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது யாரும் பயணிக்காததால் அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை உதவி இயக்குனர் பழனி ஆலோசனையின் பேரில் இளநிலை பொறியாளர் ஞானஅருள்ராஜன், சாலை ஆய்வாளர் மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் ஆலமரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 8 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், பட்டாபிராம், தண்டுரை, கோயில்பதாகை, மிட்டினமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்து நின்றதோடு, பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். பாடி-திருநின்றவூர் வரையிலான சிடிஎச் சாலை பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே முடங்கினர்.

இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்.கலெக்டர் ரத்னா, ஆவடி தாசில்தார் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிவித்துவிட்டு சென்றனர். புழல்: புழல், புத்தாகரம், சூரப்பட்டு, செங்குன்றம், சோழவரம், அலமாதி உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் ஆங்காங்கே  மழைநீர் தேங்கி குளம்போல் உள்ளது.

50 கிராமங்களில் மின்தடை
ஊத்துக்கோட்டை மற்றும் தாராட்சி தொம்பரம்பேடு, பாலவாக்கம், தண்டலம், வெங்கல், தாமரைப்பாக்கம், பெரியபாளையம்  ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில்  குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையால் சென்னை-திருப்பதி சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மேலும்
ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலை சீத்தஞ்சேரியில் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்தன. இதனால் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை இடையே போக்குவரத்து ஒரு  மணி நேரம் பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

பலத்த மழை காரணமாக ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் 7 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு மீண்டும் 8.45 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் அவதிப்பட்டனர்.

பள்ளிகள் இயங்கும்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே இரவில் 1,685 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல இயங்கும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

தண்ணீர் வரத்து 5 கனஅடி
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து பெய்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 5 கனஅடி வீதம் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழைநீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.

Tags : Thundershowers ,
× RELATED தென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில்...