சுமை தூக்கும் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காண ஐகோர்ட் உத்தரவு

விழுப்புரம், செப். 20: விழுப்புரம் நகர சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி பிரச்னையில் விரைந்து தீர்வு காண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் 300க்கும் மேற்பட்ட மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்துக்கு சுமைப்பணி தொழிலையே நம்பியுள்ளனர். இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளாக எந்தவிதமான கூலி உயர்வும் வழங்கப்படவில்லை. பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், போராடியும் பலனில்லை. இந்நிலையில் வேறுவழியின்றி விழுப்புரம் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு அன்மையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Advertising
Advertising

தொழிலாளர் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித்தர தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விழுப்புரம் நகர சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை வழக்கை ஒருமாத காலத்திற்குள் தமிழக அரசு தீர்வுக்கு அனுப்ப வேண்டுமென்றும், அந்த தொழிலாளர் நீதிமன்றம் தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை விரைவாக பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் நீதிமன்றம் வாரந்தோறும் இந்த வழக்கை விசாரித்து கூடிய விரைவில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான பிரச்னையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு தீர்வு காண இந்திய தொழிற்சங்க மையத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: